மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி அளித்து அவர்களின் அறிவியல் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு பட்டியல் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு, மே 19 முதல் 30 வரை பயிற்சி நடத்தப்படும்.
8 ஆம் வகுப்பு முடித்து தற்போது 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் கண்காட்சிகள், வினாடி வினாக்கள், ஒலிம்பியாட்கள் மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்ற அனுபவம் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.