புது டெல்லி: கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 11 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா ஒருவர் இறந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதன் மூலம், இதுவரை இறப்பு எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 7 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து 6,836 ஆக உள்ளது.
இவர்களில், கேரளாவில் 1,920 பேர், குஜராத்தில் 1,433 பேர், டெல்லியில் 649 பேர் மற்றும் மகாராஷ்டிராவில் 540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14,772 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் உள்ள மேக்ஸ் சாகெத் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரொம்மல் டிக்கு கூறுகையில், “கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தெரியும். பீதி அடையத் தேவையில்லை” என்றார்.