ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “வியாழன் அன்று முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது என்பது ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளத்தையும் அதன் அரசியலமைப்பு உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும்.
மாநில அந்தஸ்து மறுசீரமைப்பு விவகாரத்தை பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எடுத்துச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அமைச்சரவை முழு அதிகாரம் வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளத்தையும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாப்பது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கியமான கொள்கையாகும்.
இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் வரும் நாட்களில் டெல்லி செல்கிறார். நவம்பர் 4-ம் தேதி ஸ்ரீநகரில் சட்டப்பேரவையை கூட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் சட்டசபை கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் ஆற்றவிருக்கும் உரையின் வரைவோலையும் அமைச்சரவை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இது குறித்து ஆலோசித்து மேலும் பரிசீலிக்கும்,” என்றார்.
இதற்கிடையில், அமைச்சரவையின் இந்த தீர்மானம் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது பற்றி மட்டுமே பேசுகிறது; சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவது பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
மேலும் இது தேசிய மாநாட்டுக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் சரணடைதல் மற்றும் விலகல் என்றும் கூறியது. மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாடு, அவாமி இத்திஹாத் போன்ற அரசியல் கட்சிகள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அரசியலமைப்பின் 370 – 35A மற்றும் தேசிய மாநாட்டின் தேர்தல் வாக்குறுதியான ஆக.5.2019-க்கு முந்தைய மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்டது.