சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசாவை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
இதையடுத்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
ஆக., 31 முதல் செப்டம்பர் 4 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக., 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் சின்னக்கல்லாறு, கோவை மாவட்டம் பந்தலுார் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.