புதுடெல்லி: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ‘ஆரோக்கியமான கர்ப்ப காலம் மற்றும் தாய்-சேய் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான இடைவெளி’ என்ற தலைப்பில் ஆன்லைன் குழு விவாதம் நேற்று நடந்தது.
இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசியதாவது: மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎப்ஆர்) குறைவாக உள்ள மாநிலங்களில், தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இந்த விகிதம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில், குறைக்கப்பட வேண்டும். இதற்கு நாம் பாடுபட வேண்டும். நவீன கருத்தடை மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கின்றன. இவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் இவை பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு குறித்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு. இந்த உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்த புதிய தகவல் தொகுப்பை அமைச்சர் நட்டா வெளியிட்டார். சுகாதார அமைச்சின் முன்னணி ஊழியர்களின் அர்ப்பணிப்பை அமைச்சர் பாராட்டினார்.