புது டெல்லி: டெல்லியில் தசரா கொண்டாட்டங்களின் போது பெய்த கனமழையால் தலைவர்களின் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, ராவணன் உருவ பொம்மை சேதப்படுத்தப்பட்டது. வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் இருந்து வந்த பலத்த காற்று காரணமாக டெல்லியில் நேற்று பலத்த மழை பெய்தது. 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வடமேற்கு இந்தியா முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தசரா கொண்டாட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. விழா மைதானம் சேறும் சகதியுமாக மாறியதால் கொண்டாட்டங்கள் தாமதமாகின. கனமழை காரணமாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த தசரா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

கிழக்கு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்த ராம்லீலா குழுவின் நிகழ்விற்கு பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டது. பிதாம்பூரில் நடந்த நிகழ்வில் அமித் ஷா கலந்து கொள்ள முடியவில்லை. செங்கோட்டை அருகே நடந்த ராவண தகன விழாவில் சோனியா காந்தி பங்கேற்பதும் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுடன் மற்றொரு ராம்லீலா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். மழைக்குப் பிறகு, பல ராம்லீலா குழுக்கள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்தன. நனைந்த உருவ பொம்மைகளை எரிக்க பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்த வேண்டியிருந்தது. மழை நின்ற பிறகு, விழாக்களைக் காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.