புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த சில நாட்களில், இந்தியாவின் வலிமையைக் கண்டு முழு உலகமும் வியப்படைந்துள்ளது. இந்த நேரத்தில், முப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். நமது உளவுத்துறை அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது இலக்கு அடையப்பட்டுள்ளது. நமது வீரர்கள் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் காவி நிறத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது இப்போது அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. அது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வு. பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத முகாம்கள் 7-ம் தேதி அதிகாலையில் துல்லியமான தாக்குதல்களில் அழிக்கப்பட்டன. அத்தகைய தண்டனையை அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.