புதுடெல்லி: ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். இந்த பயணத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, பிரதமர் மோடி கடந்த மாதம் 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா சென்றார். 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால், இந்த பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை பிரதமருக்கு வழங்கினார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியின் ரஷ்யா பயணம் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்த தகவல் நேற்று வெளியானது. ஆனால் அவரது பயண தேதிகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. உக்ரைன் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்கிறார்.
பேச்சு வார்த்தை தீர்வு: ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. அதே சமயம் ரஷ்யாவின் தாக்குதலை இந்தியா இதுவரை நேரடியாக விமர்சிக்கவில்லை. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.