மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி மன உறுதியில் ஈடு இணையற்றவர், அவர் அதிகாலை 2 மணி வரை மின்னஞ்சல்களை சரிபார்த்து பதில் அளிப்பார் என அவரது மகன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ‘மும்பை டெக் வீக்’ நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தனது குடும்பம் குறித்து கூறியதாவது:-
எனது மிகப்பெரிய உத்வேகம் எனது குடும்பத்திலிருந்து வருகிறது. 32 ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறோம். என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். எனது தந்தை முகேஷ் அம்பானி அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலையன்ஸ் நிறுவனங்களை கவனித்து வந்தாலும், நள்ளிரவு 2 மணி வரை மின்னஞ்சல்களை சரிபார்த்து பதில் அனுப்புகிறார்.
அவரிடமிருந்து தான் நாம் உண்மையில் உத்வேகம் பெறுகிறோம். நானும் என் அம்மா நீதா அம்பானியும் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். நாங்கள் ஒன்றாக டிவியில் கிரிக்கெட் பார்க்கிறோம். அவர் கவனிக்கும் சிறிய விஷயங்களிலிருந்தும் நாம் உத்வேகம் பெறலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அர்ப்பணிப்பு என்பது மிகப்பெரிய உத்வேகம். மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய விஷயங்கள் மிகப்பெரிய உத்வேகம். நான் 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறேன். எனது மனைவி ஸ்லோகா மேத்தாவின் ஆதரவுக்கு நன்றி. இவ்வாறு ஆகாஷ் அம்பானி கூறினார்.