திவாகரும் அவரது மனைவி அஸ்வினியும் கர்நாடக மாநிலம் மைசூர் ஹுன்சூரில் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பதில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திவாகர் குழந்தைக்கு “ஆதி” என்று பெயரிட விரும்பினார், ஆனால் அஷ்வினி “வங்கிஷ்” என்று பெயரிட வலியுறுத்தினார். இந்த கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அஸ்வினி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து அஸ்வினி தனது கணவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். ஹூன்சூர் எட்டாவது செஷன்ஸ் கோர்ட்டில், “நான் தேர்ந்தெடுத்த பெயரை குழந்தைக்கு வைக்க என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதி கோவிந்தய்யா, “”குழந்தைக்கு பெயர் வைப்பதில் என்ன பிரச்னை? பெயரில் என்ன தவறு? குழந்தைக்கு நல்ல கலாச்சாரம் மற்றும் உயர்கல்வி கொடுங்கள்” என அறிவுறுத்தினார்.
பின்னர், உதவி அரசு வழக்கறிஞர் சவுமியா, குழந்தைக்கு “ஆர்யவர்தன்” என்ற பெயரை பரிந்துரைத்தார். நீதிபதி கோவிந்தய்யா, குழந்தைக்கு அந்த பெயரை வைக்க சம்மதித்து, அனைவருக்கும் முன்னிலையில் இனிப்புகளை வழங்கினார். பெற்றோரும் இந்த முடிவுக்கு சம்மதிக்க, மேலும் தாமதிக்காமல் பிரச்சினை தீர்க்கப்பட்டது.