புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குளிர்காலத்தில், கடுமையான பனிமூட்டம் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் விமான சேவைகள் பொதுவாக பாதிக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பயணிகள் விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நேரம் வரை விமானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, விமான போக்குவரத்து துறையிடம் பல்வேறு புகார்களை அளித்தனர். இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், பயணிகளின் சிரமம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில், பனிமூட்டம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டால், பயணிகளை இறக்கிவிட வேண்டும் என்றும், பயணிகள் விமானத்தில் ஏறும் போது மீண்டும் சோதனை செய்யத் தேவையில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்புப் பகுதியில் எல்இடி திரைகள் பொருத்தவும், இதன் மூலம் விமானம் புறப்படும் தகவலை அறிந்து அவற்றை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானப் பயணிகளின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.