பெங்களூரு: கர்நாடக சட்டசபை நுழைவு வாயிலில் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட ‘மைசூரு கேட்’ என்ற புதிய கேட் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா நாளை திறந்து வைக்கிறார்.
இந்தியாவில் உள்ள தலைமைச் செயலகங்களில், கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான் சவுதாவுக்கு தனி மவுசு உள்ளது. இதன் கட்டிடக்கலை மற்றும் கம்பீரமான தோற்றம் பார்ப்பவர்களைக் கவரும். இது பெங்களூரின் அடையாளமாகவும் உள்ளது.
பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் விதான் சவுதாவின் கலைத்திறனைக் கண்டு வியந்துள்ளனர்.
தற்போது, அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில், சட்டசபை வளாகத்தின் நுழைவு வாயில், ‘மைசூரு கேட்’ என அமைக்கப்பட்டுள்ளது. 15 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்ட கருங்காலி ரோஸ்வுட் மரத்தில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மைசூர் அரண்மனையின் தர்பார் மண்டபத்தின் நுழைவு வாயிலில் உள்ள கதவுகளைப் போன்று மிகவும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கதவு கைப்பிடிகள் தங்க முலாம் பூசப்பட்டவை. மொத்தம் மூன்று கதவுகள் உள்ளன. நுழைவு வாயிலின் மேல் பகுதியில், கர்நாடக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் ஒரு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற சபாநாயகர் காதரின் அறிவுறுத்தலின் பேரில் மைசூரைச் சேர்ந்த கலைஞர் கிஜார் அலி கான் இதை வடிவமைத்தார். இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் முன் முதல்வர் சித்தராமையா திறந்து வைக்கிறார். இதற்கு முன், இப்பகுதியில் எளிமையான இரும்பு கேட் இருந்தது குறிப்பிடத்தக்கது.