மதுபானி: பீகார் மாநிலம் மதுபானி நகரில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், 50,294 பயனாளிகளுக்கு ரூ. 1,121 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோடீஸ்வர சகோதரி இருக்க வேண்டும் என்பதே நமது பிரதமர் மோடியின் விருப்பம்.
இதற்காக வங்கிகள் பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. பீகாரில் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்களுக்கு பயிற்சியும், நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களில் ஒவ்வொரு பெண்ணும் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அதிக திறன் மற்றும் அதிகாரம் பெற முடியும்.
2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் பெண்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி பெண்களால் இயக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.