புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்தார். டூரிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜொனாதன் சித்தார்த் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு புரட்சியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்றும், இதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் விளக்கினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்ததாக டேட்டாரோபோட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தேபன்ஜன் ஷாகா தெரிவித்தார். மதிப்புள்ள AI இன்னோவேஷன் சென்டரில் இணைந்து பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்தார். ரூ. 500 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. விஎம்வேர் சிஇஓ ரகு ரகுராம் மற்றும் ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் சிஇஓ Anje Mitha ஆகியோருடனான சந்திப்பில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

விண்வெளித் துறையின் AI பிரிவில் அவர்களின் ஒத்துழைப்பை ஆராயும்படி அவர் அவர்களிடம் கேட்டார். நிர்மலா சீதாராமன் கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் மற்றும் அவரது குழுவினரையும் சந்தித்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தார். இந்தியாவின் AI திட்டத்தை தாமஸ் குரியன் பாராட்டினார். தாமஸ் குரியன் கூறுகையில், கூகுள் கிளவுட் தனது அனைத்து தரவு மையங்களையும் 2030க்குள் பசுமை ஆற்றலில் இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்களை நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.
அப்போது நிதித்துறை செயலாளர் அஜய் சேத், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவெத்ரா ஆகியோர் உடனிருந்தனர். இந்திய AI திட்டத்திற்கு ரூ.10,300 கோடி ஒதுக்கீடு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். தனியார் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களுக்காக முன்மொழியப்பட்ட ரூ.1 லட்சம் கோடி தொகுப்பில் உலகளாவிய நிறுவனங்கள் ஒத்துழைக்க நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.