புதுடெல்லி: வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்த உள்ளது. இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா செல்ல உள்ளார். மத்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் அமெரிக்கா மற்றும் பெரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய வர்த்தக பங்காளிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையும். இந்த விஜயத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2-வது கூட்டம் மற்றும் GSTR கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார் என்று அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் ராஜேஷ் அகர்வால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வாஷிங்டனுக்கு வருகிறார். 90 நாட்களுக்குள் வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அவரது பயணம் கவனம் செலுத்தும்.