புதுடெல்லி: பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?
டெல்லியில் இனி பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என கடந்த மாதம் பாஜக அரசு அறிவித்திருந்தநிலையில், அது இந்த மாத இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. காரணம் என்ன பார்க்கலாம்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்தநிலையில் உள்ளது . இதனை கட்டுக்குள் கொண்டு அரசுபல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசல் கிடையாது என்ற அறிவிப்பினையும் வழங்கியுள்ளது.
பாஜக பொறுப்பேற்று சில மாதங்களே ஆன சூழலில், பழைய வாகனங்களுக்கு இனிமேல் பெட்ரோல் ,டீசல் கிடையாது என்ற அறிவிப்பினை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஆனால், அது முடியாமல் போனது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை நிறுத்துமாறு அறிவுரை கூறியது. இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தநிலையில், பாஜக அரசு காற்று மாசுபாட்டு கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மேலும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை மந்திரி மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒரு பெட்ரோல் பங்க்கில் அதை செயல்படுத்தி, மற்றொரு பங்க்கில் செயல்படுத்தாவிட்டால் இந்த திட்டத்தால் என்ன பயன்? எனவேதான், அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டவுடன் திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு எடுத்து இருக்கிறோம்” என்று கூறினார்.
டெல்லியில் மொத்தம் 500 பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. நிலையங்கள் உள்ளன. இவற்றில் 372 பெட்ரோல் பங்க்குகளிலும், 105 சி.என்.ஜி. நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலையங்களில் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.