புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று (ஜன. 08) நடத்துகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வசதியாக, அரசியலமைப்பின் 129வது திருத்த மசோதா, டிச., 17ல், லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நாளில், யூனியன் பிரதேச திருத்த மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் 39 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு இன்று காலை 10.30 மணிக்கு தனது முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. இதில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கி, நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து பேச, சட்டத்துறை செயலர்கள் தயாராக உள்ளனர்.
கூட்டுக் குழுவில் 12 ராஜ்யசபா உறுப்பினர்களும், 27 மக்களவை உறுப்பினர்களும் உள்ளனர். இதில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ராவும் உறுப்பினராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.