ஜம்மு காஷ்மீரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், சிறு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
தேசிய மகாநாடு-காங்கிரஸ் கூட்டணி 44 இடங்கள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் உள்ள அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தொங்கு சட்டசபையில் சிறிய கட்சிகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போதைய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், லெப்டினன்ட் கவர்னர் ஐந்து நியமன உறுப்பினர்களை சட்டப் பேரவைக்கு நியமிக்கலாம்.
நியமன உறுப்பினர்களுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆக உயரும். இத்தகைய சூழலில் தேசிய மகாநாடு-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படும்.