புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகஸ்ட் 1 முதல் புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முதல் முறையாக வேலைக்கு சேரும் பணியாளர்கள், ‘உமாங்’ செயலி வழியாக முக அங்கீகார தொழில்நுட்பம் (FAT) மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த புதிய நடைமுறை, பல புதிய பணியாளர்களுக்கு யு.ஏ.என். எண் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தகவல்படி, இரண்டே நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்மார்ட்போன் அல்லது நிலையான இணைய வசதி இல்லாத ஒப்பந்த, தற்காலிக ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யு.ஏ.என். எண் இல்லாததால், சம்பளமும் பி.எப். தொகையும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் அலுவல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பள தாமதம் நேரடியாக பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.
எனவே, யு.ஏ.என். வழங்கும் செயல்முறையை ஆன்லைனில் எளிமையாக்கி, பணியில் சேரும் போதே எண் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூட்டமைப்பு கோரியுள்ளது. புதிய விதி நடைமுறையில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், பணியாளர்களும் நிறுவனங்களும் பாதிக்கப்படாமல் இருப்பர் என நம்பப்படுகிறது.