இஸ்லாமாபாத் அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” என்ற அதிரடி தாக்குதலில் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீண்டும் அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதுடன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகள் பயன்படுத்திய முகாம்களும் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முழு ஆதரவுடன், LOC அருகேயுள்ள வனப்பகுதிகளில் இந்த முகாம்கள் மறுபடியும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முகாம்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட லூனி, புட்வால், திப்பு போஸ்ட், சப்ரார் ஃபார்வர்ட் போன்ற பகுதிகளில், கண்காணிப்புக்கு எட்டாத இடங்களில் புதிய முகாம்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தொடர்ந்து டிரோன்கள் மூலமாக நுழைவு முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதனை தடுக்க விரைந்து செயல்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சரியான பதில் அளிக்க முடியாமல், தற்போது பேச்சுவார்த்தை கோரும் நிலையில் உள்ளது.
பாகிஸ்தானின் இந்த மீளுருவாக்க நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேலும் தீவிரமாகும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வாயிலாக இருக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கிறது. இந்தியா இதற்கான பதிலடி நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகவும், பயங்கரவாதத்தை எப்படியும் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றது.