புதுடெல்லி: இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி கூறியதற்கு பதிலளித்துள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்படுவதற்கு முன் அவர்களின் மதம் குறித்து கேட்டதாகத் தெரிகிறது. இந்த அட்டூழியத்தைச் செய்த நீங்கள் கவாரிஜை விட மோசமானவர்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் மற்றொரு பிரிவாக நீங்கள் அறியப்படுவீர்கள். அப்பாவி மக்களை அவர்களின் மத நம்பிக்கைகளைக் கேட்டு கொல்வது இஸ்லாத்தில் இல்லை. இந்தியாவுக்கு அரை நூற்றாண்டு பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் உள்ளது. உங்களின் தேசிய வரவுசெலவுத் திட்டத்தை விட எங்களின் இராணுவ வரவு செலவுத் திட்டம் அதிகம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியாவை அணு ஆயுதம் மூலம் மிரட்டக் கூடாது. இன்னொரு நாட்டின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டால் யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது போல் காஷ்மீர் மக்களும் நமது பிரதமர் மோடியிடம் கூற விரும்புகிறேன் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து, பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை மண்டியிடும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.