புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே, 2008-ல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஜனவரி, 1 மற்றும் ஜூலை, 1-ல் கைதிகள் பரிமாற்றம் நடக்கும். தற்போது, 381 பொதுமக்கள் கைதிகளும், 81 பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்களும் இந்திய சிறையில் உள்ளனர். அதேபோல் பாகிஸ்தானில் 49 இந்திய சிவில் கைதிகளும் 217 மீனவர்களும் உள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் தண்டனையை முடித்த 183 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுக் கைதிகளை விரைவில் இந்தியாவுக்கு அனுப்புமாறு பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 18 இந்திய சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களுக்கு இந்திய தூதரக உதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் என நம்பப்படும் 76 பேரின் குடியுரிமையை சரிபார்த்து, தகவல்களை விரைவில் வழங்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
2014 முதல், இந்தியாவின் முயற்சியால் 2,639 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கைதிகள் பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து 478 இந்திய மீனவர்களும், 13 இந்திய சிவில் கைதிகளும் தாயகம் திரும்பியுள்ளனர்.