புதுடில்லியில் கடந்த சில நாட்களாக வானிலை திடீரென மாறி, கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த மழை காரணமாக தலைநகர் முழுவதும் சாலைகள் தண்ணீரால் மூழ்கின. முக்கிய பாதைகளில் வாகனங்கள் நின்று போக, பயணிகள் பல மணி நேரம் சிக்கிக் கொண்டனர். இந்த நெரிசலால் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

வானிலை திடீர் மாற்றம் காரணமாக, டில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து டில்லிக்கு வர இருந்த 15 விமானங்கள் அவசரமாக ஜெய்பூர், லக்னோ மற்றும் சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்களும் தாமதமடைந்தன. இதனால் பயணிகள் அவதியுற்று விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
மழை அளவுகள் பல்வேறு பகுதிகளில் மாறுபட்டன. சப்தர்ஜங் பகுதியில் மட்டும் 14.6 மிமீ மழை பதிவாக, பாலம் பகுதியில் 52.5 மிமீ வரை பெய்தது. மயூர் விஹார், பிடம்புரா, ஜனக்புரி போன்ற பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை வரை பதிவு செய்யப்பட்டது. நகரின் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு நீடிக்கிறது.
வானிலை ஆய்வு மையம் இன்று மீண்டும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் பயணிகள் தங்கள் பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வருமாறு அறிவுறுத்தினர். மழை காரணமாக டில்லி நகரம் முழுவதும் வாழ்க்கை மந்தமாகி, பொது மக்கள் அவதியுறும் நிலை நீடிக்கிறது.