பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாடுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நவம்பர் 18ஆம் தேதி சிவகங்கை மலையடிவாரத்தில் உள்ள கம்பலு கொல்லரஹத்தி கிராமத்தில் கரியம்மாவை சிறுத்தை கொன்று உடலை எடுத்துச் சென்றது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, சிறுத்தையை பிடிக்க வனத்துறைக்கு மக்கள் விண்ணப்பித்தனர்.
சிவகங்கை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதால், வனத்துறையினர் பல இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 25ம் தேதி அதிகாலை கூண்டில் சிறுத்தை சிக்கியது மக்களை நிம்மதியடைய செய்தது.
அந்த வகையில், சமீபத்தில், பெங்களூரு புறநகரில் உள்ள ஜிகானி, ஆனேகல்லின் அருகே உள்ள நிசர்கா லேஅவுட் மற்றும் லோட்டஸ் லேஅவுட் ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், வனத்துறையினர் சிறுத்தையை தேடினர்.ஆனால், சிறுத்தையை காணவில்லை.
எனவே, ‘நிசர்கா லேஅவுட் மற்றும் லோட்டஸ் லேஅவுட் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். எக்காரணம் கொண்டும் தனியாக வெளியில் நடமாடாதீர்கள். இரவில் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். சிறு குழந்தைகளை வெளியில் விடாதீர்கள்.’