பாட்னா: பீகாரில் நடந்த அரசு விழாவில், முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண்ணின் தோளில் கை வைத்து புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் சார்பாக நேற்று பாட்னாவில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் அமித் ஷா, முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில், ஒரு பெண் பயனாளிக்கு உதவி வழங்கும் போது, முதல்வர் நிதிஷ் குமார் அவரது தோளைப் பிடித்து புகைப்படம் எடுக்க இழுத்தார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியான பிறகு, பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்துள்ளது.
“மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண்ணை ஆட்சேபனைக்குரிய முறையில் இழுக்கிறார். உடல்நிலை சரியில்லாத முதல்வர் மற்றும் உதவியற்ற பாஜகவால் பீகார் அவமானப்படுத்தப்படுகிறது” என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.