புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த பட்ஜெட், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வரைபடத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில், சீர்திருத்தங்களின் வேகத்தை விரைவுபடுத்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அரசின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வைக்கு பட்ஜெட் பயனுள்ள ஆவணமாக இருக்கும் என்றார். இந்நிலையில், பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திட்ட அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன், பொருளாதார நிபுணர்கள் சுர்ஜித் பல்லா, அசோக் குலாட்டி, மூத்த வங்கியாளர் கே.வி.காமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக பொருளாதார நிபுணர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.