புதுடெல்லி: அரசியல் சாசனம், அக்னி பாதை, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவை தொடர்பாக தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி. அந்த கட்சி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தனக்கு இரையாக்கிவிடும் என்று மக்களவையில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். கடந்த 27-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது: நமது நாடு வளர்ச்சி அடையும்போது பல கோடி மக்களின் கனவுகள் நனவாகும். எதிர்கால தலைமுறைக்காக இப்போதே வலுவான அஸ்திவாரத்தை அமைத்து வருகிறோம். கிராமங்கள், நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நடந்த ஆட்சிகளில் நிலக்கரி ஊழல், நாட்டின் வளர்ச்சியை அழித்தது. எங்கள் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டு நிலக்கரி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வங்கிகளின் செல்வங்கள் சூறையாடப்பட்டன. தற்போது வங்கிகளில் முறைகேடுகள் ஒழிக்கப்பட்டு, வங்கித் துறை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
முன்பு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அன்றைய மத்திய அரசு மவுனம் காத்தது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு, எதிரிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்கள் அழிக்கப்பட்டனர். இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் மூலம் தீவிரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டது. அரசமைப்பு சாசனம் குறித்து ஒரு தரப்பினர் இப்போது அதிகமாக பேசுகின்றனர். ஆனால் 370-வது சட்டப் பிரிவின் காரணமாக காஷ்மீரில் அரசமைப்பு சாசனம் அமல்படுத்தப்படாமல் இருந்தது.
எங்கள் ஆட்சியில்தான் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து, அங்கும் அரசமைப்பு சாசனத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினோம். இதனால், ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வந்து வாக்களித்தனர். தற்போதைய மத்திய அரசால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
அரசமைப்பு சாசனம் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பொய் கூறி வருகிறது.நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை நினைத்து, 50-வது ஆண்டு தினத்திலும்கூட வருந்துகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. ஊடகங்கள் நசுக்கப்பட்டன. அரசமைப்பு சாசனத்தை அழிக்கும் முயற்சிகள் அரங்கேறின. கடந்த ஆட்சிக் காலங்களில் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒரு ரூபாய் ஒதுக்கினால் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடையும். 85 பைசா ஊழலில் கரைந்துவிடும். வீடு கட்ட, சமையல் எரிவாயு இணைப்பு வாங்க என எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் தற்போது காங்கிரஸுக்கு ஒரு இடம்கூட இல்லை. மக்களவை தேர்தலில் 3-வதுமுறையாக காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இந்த உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். போலி வெற்றியை கொண்டாடாதீர்கள். சில கூட்டணி கட்சிகளின் உதவியால் மட்டுமே காங்கிரஸுக்கு இத்தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணி போன்றது. அந்த கட்சி கூட்டணி வைக்கும் கட்சிகளின் வாக்குகளை தனக்கு இரையாக்கிவிடும்.
தென்மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, வடமாநிலங்களுக்கு எதிராக பேசுகின்றனர். மொழியின் பெயரால் பிரிவினையை தூண்டுகின்றனர். காங்கிரஸ்கட்சி பொய்யை ஆயுதமாக பயன்படுத்துகிறது. மக்களவை தேர்தலின்போது மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.8,500 செலுத்தப்படும் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறினர். இதுபோன்ற பொய்யை இப்போது அவையிலும் பேசுகின்றனர். அக்னி பாதை திட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தும் அவையில் பொய்கள் அள்ளி வீசப்பட்டன. இதுதொடர்பாக மக்களவை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணுவ ஆள்சேர்ப்பு குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. ராணுவத்தில் இளைஞர்களை சேரவிடாமல் தடுக்க அந்த கட்சி முயற்சி செய்கிறது. இதன்மூலம் ராணுவத்தை பலவீனமாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக நேரு அரசு செயல்பட்டதால் அப்போதைய அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் விலகினார். அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க நேரு முயற்சித்தார். பாபு ஜெகஜீவன் ராமுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை காங்கிரஸ் அளிக்கவில்லை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை கொண்டுவந்தார். ஆனால் இந்த திட்டம்பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகே திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு குறித்து குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் நலனில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம். நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் சர்வதேச அரங்கில் பாரதத்தின் புகழ் ஓங்கி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாம் முன்மாதிரியாக திகழ்கிறோம். உலகின் ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.