ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியா அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
உலக விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் 16வது பிரிக்ஸ் மாநாடு, ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்கியது. உலகின் பல பகுதிகளிலும் போர் சூழ்ந்துள்ள சூழல் மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான மோதல்களுக்கு மத்தியில் தொடங்கியது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். கசான் வந்தடைந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான இந்திய வம்சாவளியினர் மோடியின் ஓட்டலுக்கு திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன்பின், மாநாட்டிற்கு முன், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் குறித்து விவாதிக்கப்பட்டது.
மோடி, “கடந்த 3 மாதங்களில் இது எனது 2வது ரஷ்யா பயணம். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவையும் ஆழமான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “பிரச்சினைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று மோடி கூறினார். விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்புவதற்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிக்கிறோம், நாங்கள் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
உச்சி மாநாட்டிற்கு பிறகு பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். இந்தியா – சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
BRICS முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை கடந்த ஆண்டு இணைந்தன. தற்போது, 10 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் சேர கியூபா உட்பட 30 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பின் போது, புதின் தனது தொடக்க உரையில், “எந்த மொழிபெயர்ப்பாளரும் இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளக்கூடிய நெருக்கமான நட்பு” என்று கூறினார். இந்தியா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பைப் பாராட்டுவதாக அவர் கூறினார். பிரிக்ஸ் நாடுகளுக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்த கசானில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் புதின் வலியுறுத்தினார்.