திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் ராப்தாடு தொகுதியில் உள்ள பாப்பிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் நலத் தலைவர் குருபா லிங்கமையா படுகொலை செய்யப்பட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்பத்தினரை சந்திக்க நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க காத்திருந்த மக்கள் ஹெலிகாப்டரை சூழ்ந்து கொண்டனர்.
இதில் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பாதுகாப்பு காரணங்களால் விஐபிகளை ஏற்றிச் செல்ல முடியாது என்றும், அதனால் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் உடனடியாக புறப்பட்டுச் சென்றது என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி லிங்கமையா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு காரில் பெங்களூரு புறப்பட்டு சென்றார். பீகாராக மாறியது ஆந்திரா: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஆந்திராவின் நிலவரத்தை பார்த்தால் பீகார் போல் தெரிகிறது. அரசியல் சூழ்நிலை சீரழிந்து, சிவப்பு புத்தகம் என்ற பெயரில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு பலம் இல்லாவிட்டாலும், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை தேர்தல் நடைபெற்ற 50 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் என்ற ஆணவத்துடன் அனைத்து பதவிகளும் வேண்டும் என கூறி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகிறார் சந்திரபாபு.