புதுடெல்லி: நேபாளத்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேபி சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்பகமல் தஹால் என்ற பிரசாந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
பிரசண்டா ஆட்சி கவிழ்ந்தது: இந்தக் கூட்டணியில் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், இந்த இரு தலைவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதற்கிடையில் பட்ஜெட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசாந்தா கடந்த 12ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் அவரது அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை அதிபர் ராம் சந்திர பவுடல் நேற்று முன்தினம் நியமித்தார். புதிய அரசுக்கு நேபாள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. புதிய பிரதமர் சர்மா ஒலிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு எனது வாழ்த்துக்கள். நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காகவும் நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.