புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி தனது சொந்த லாபத்திற்காக அம்பேத்கரின் சமூக நீதியை அழித்துவிட்டது என்றும் அவர் கூறினார். ஹரியானாவில் ஹிசார் விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சி அதிகாரம் பெறுவதற்கு புனிதமான அரசியல் சாசனத்தை ஆயுதமாக பயன்படுத்தியது.எப்போதெல்லாம் ஆட்சி அமைக்க முடியாது என்று நினைத்ததோ அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி அதை செய்தது. அம்பேத்கர் இந்திய சமூகத்தில் சமத்துவத்தை எதிர்பார்த்தார்.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைவரும் கண்ணியத்துடன், தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற கனவை அம்பேத்கர் கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை அழித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களை நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதியது.

அக்கட்சியின் தலைவர்கள் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்ந்தனர். அதேநேரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காத விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டனர். ஏழைகளின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வக்பு வாரியத்திற்கு பல லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது.
அந்த சொத்துகளின் பலன்களை ஏழைகளுக்கு வழங்கியிருந்தால், “நிச்சயமாக அவர்களுக்கு பலன் கிடைத்திருக்கும். ஆனால், இந்த சொத்துகளால் ஆதாயம் அடைந்தது நில மாபியாக்கள் தான்,” என்றார்.