வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சேதங்களை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் கேரள கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை கேரள கவர்னர் மற்றும் முதல்வர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சூரல்மாலா பகுதியில் மேற்பரப்பு ஆய்வு நடைபெற்று வருகிறது. அவர்களுடன் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மதியம் 12.15 மணிக்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேச உள்ளார்.
மேலும் நிலச்சரிவில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். தற்போது மீட்புப் பணிகள் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்க உள்ளார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்பேட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வயநாடு மற்றும் கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த 30ம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் முண்டகை, சூரல்மலை, அட்டாமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயமடைந்தனர். 138 பேரைக் காணவில்லை.