புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களில் நீண்டநாள் நிலவும் சிக்கல்களுக்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக மணிப்பூர் மாநிலத்திற்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி செல்ல உள்ளார்.
முதலில், மிசோரமில் பைராபி – சாய்ராங் இடையிலான 51.38 கி.மீ. ரயில் பாதை திட்டத்தை பிரதமர் துவக்கி வைக்கிறார். அசாமின் சில்சார் வழியாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை, மிசோரமை நாட்டின் பிற பகுதிகளுடன் நேரடியாக இணைக்கிறது. அதே நாளில், மோடி மணிப்பூருக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

2023 மே மாதத்தில், மணிப்பூரில் கூகி – மெய்டி சமூகங்களுக்கு இடையே இட ஒதுக்கீடு பிரச்சினையைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் சூழ்நிலை ஓரளவு சீரானது. இருப்பினும், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடையிடையே நடந்தன. இதையடுத்து, அப்போதைய முதல்வர் பா.ஜ. மூத்த தலைவர் பைரேன் சிங் ராஜினாமா செய்தார். அதன் பின் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக வன்முறைச் சூழலில் இருந்தும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு வரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பிரதமர் நேரடியாக மணிப்பூருக்கு செல்ல இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.