புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து வயநாட்டில் புனரமைப்பு பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்த மத்திய அரசு, சிறப்பு நிதியும் ஒதுக்கவில்லை. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவுக்கு சிறப்பு நிதி வழங்க மறுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து கேரள எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், “வயநாடு மக்களுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.