புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு அதிகாரிகள் கூட்டத்தை நடத்தவும், தனிப்பட்ட உத்தரவு பிறப்பிக்கவும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதனுக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் அரசு நிர்வாகத்தை தன் கையில் எடுத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். யார் ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்க வேண்டும்.
கருத்து வேறுபாடு இருந்தால் மத்திய அரசுக்கு அனுப்பலாம். தற்போதைய கவர்னரும் கிரண் பேடி போல் செயல்படுகிறார். இது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஆளுநர் கைலாசநாதன் தனி ஆட்சி நடத்தி வருகிறார். முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் உத்தரவு பிறப்பிப்பது ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை புறக்கணித்து வருகிறார். முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவி, நாற்காலிகளைப் பாதுகாக்க வாயை மூடிக்கொண்டு டம்மி ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

விதிகளை மீறி கோப்புகளை அனுப்பி, அதிகாரிகளை விமர்சித்து முதல்வர் தப்பிக்க பார்க்கிறார். நிர்வாகத்தை வழிநடத்தும் முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளை குறை சொல்ல முடியாது. அது தன்னைத் தானே விமர்சிப்பதற்குச் சமம். தற்போது புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, எங்கிருந்து வந்தாலும் அங்கேயே பிரசவம் செய்யச் சொல்லி வருகின்றனர். இது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஜிப்மரில் மருத்துவ சிகிச்சை அளிக்க இயக்குநரிடம் வலியுறுத்த உள்ளேன். சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
அந்த காவல் நிலையங்களுக்கு தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டுமென்றால், எந்த காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்து பிடிபட்டால் அந்த காவல் நிலைய அதிகாரியை இடமாற்றம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.