புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை பஞ்சாப் போலீசார் திரும்பப் பெற்றுள்ளனர். பாட்டியாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் கௌரவ் யாதவ், “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவ்வப்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் வருகிறது.
இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளோம். டெல்லி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்த பஞ்சாப் காவல்துறையினரை திரும்பப் பெற்றுள்ளோம். எங்கள் கவலைகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களுடன் தொடர்பில் இருப்போம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை டெல்லி காவல்துறையுடன் பகிர்ந்து கொள்வோம்” என்றார்.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.