புது டெல்லி: மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் படுதோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் வெளியிட்ட பதிவில், ராகுல் கூறியதாவது:- மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றவில்லை என்பதே உண்மை. அது ஒரு கட்டுக்கதையாகிவிட்டது.
மேக் இன் இந்தியா திட்டம் உண்மையிலேயே உற்பத்தி மையமாக உருவெடுக்க ஒரு அடிப்படை மாற்றம் தேவை. இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத கூறுகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? மேக் இன் இந்தியா திட்டம் அந்த கூறுகளை இணைக்கும் வேலையை மட்டுமே செய்கிறது.

மாறாக, இந்தத் திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றவில்லை. ஐபோன்கள் முதல் டிவிகள் வரை, அவற்றுக்கான அனைத்து கூறுகளும் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. மேக் இந்தியா என்ற பெயரில் அந்தக் கூறுகளை ஒன்றாக இணைத்து பொருட்களை உருவாக்குகிறோம். சிறு தொழில்முனைவோர் பொருட்களை உற்பத்தி செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அதற்கான கொள்கை ஆதரவை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, அதிக வரிகளும், ஒரு சில நிறுவனங்களின் ஏகபோகமும் நாட்டின் தொழில்துறையைப் பாதித்துள்ளன. இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு அடையாவிட்டால், வேலைவாய்ப்புகளும் வளர்ச்சியும் வெறும் வெற்று வார்த்தைகளாகவே இருக்கும். இந்தியா உண்மையிலேயே சக்திவாய்ந்த உற்பத்தி மையமாக மாறவும், சீனாவுடன் சமமாக போட்டியிடவும் ஒரு அடிப்படை மாற்றம் தேவை. அது உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.