மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு எக்ஸ்-தளத்தில், நோயாளிகளும் உறவினர்களும் உறையும் குளிரில் நடைபாதைகளில் தூங்குவதாகக் கூறினார். ராகுல் காந்தி சமீபகாலமாக காய்கறி வியாபாரிகள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், லாரி டிரைவர்கள், ரயில்வே ஊழியர்கள் ஆகியோரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களுடனான சந்திப்பு மற்றும் உரையாடல் விவரங்களையும், அது தொடர்பான வீடியோ பதிவையும் எக்ஸ்-தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று இரவு ராகுல் காந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள சாலைகள், நடைபாதைகள், சுரங்கப்பாதைகளில் கிடக்கும் நோயாளிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி கூறியதாவது:-
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சை பெற, மாதக்கணக்கில் காத்திருந்த நோயாளிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் குளிரில் சாலையோரங்களில் தூங்கி வருகின்றனர். அவர்கள் சுரங்கப்பாதையில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதான் டெல்லி எய்ம்ஸின் இன்றைய உண்மை நிலை. பிரதமர் நரேந்திர மோடிக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக தூங்குகிறார். மத்திய, டெல்லி அரசுகள் பொதுமக்களுக்கான பொறுப்பை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டன. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.