சென்னை: பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள மக்களை கவரும் வகையில் ரயில்வே துறை புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய ரயில் சேவைகள், 10 ரயில்களின் சேவை நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ. கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் நவம்பரில் முடிவடைவதால், அடுத்த தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே அமைச்சகம் பீஹாரை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.

பாகல்பூர் – தும்கா – ராம்பூர்ஹட் இடையே 177 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற ரூ.3,169 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், அந்த வழியில் புதிய ரயில்கள் இயக்கப்படும். அதேசமயம், ஈரோடு – சென்னை – ஜோக்பானி இடையே ‘அம்ரித் பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், மேற்கு வங்க ஜல்பைகுரி – ராஜேந்திரா நகர் விரைவு ரயில் பீஹார் ஆராவுக்கு, புனே – தானாபூர் விரைவு ரயில் சுபாலுக்கு, ராஜ்கிர் – ஜார்க்கண்ட் கோடெர்மா உள்ளிட்ட மொத்தம் 10 ரயில்களின் சேவை நீட்டிப்பு உத்தரவு ரயில்வே வாரியத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் நிறைவேறியதால், பீஹார் மாநில மக்களில் மகிழ்ச்சி நிலவுகிறது.