சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். கூடுதலாக, கால்நடைகள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
நீர் வழங்கல் திட்டங்கள், சாலைகள், மின்சார உள்கட்டமைப்பு, பள்ளிகள், சுகாதாரம், விவசாயம் மற்றும் வீட்டுவசதி தொடர்பான விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் நேற்று (6) வரை பரவலான சேதம் பதிவாகியுள்ளது. இதில், இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 366 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 203 பேர் மழை தொடர்பான சம்பவங்களால் இறந்துள்ளனர். 163 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். நிலச்சரிவில் 42 பேர் கொல்லப்பட்டனர், 34 பேர் நீரில் மூழ்கினர், 17 பேர் மேக வெடிப்புகளில் இறந்தனர், 40 பேர் மரங்கள் அல்லது பாறைகள் விழுந்ததில் இறந்தனர், 28 பேர் பிற காரணங்களால் இறந்தனர்.
இதேபோல், அரசு சொத்துக்களில் ரூ.4,006 கோடியும், தனியார் சொத்துக்களில் ரூ.67 கோடியும் சேதமடைந்துள்ளன. மொத்த சேதம் ரூ.4,073 கோடி. 3,390 வீடுகள் மற்றும் 40 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 1,464 கால்நடைகள் மற்றும் 26,955 பண்ணை பறவைகள் இறந்துள்ளன.