புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியுள்ள பென்ஜால் புயல் புதுச்சேரியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பென்ஜால் புயல் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இன்று மாலை கரையை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக புதுச்சேரியில் கடலோர சாலை மற்றும் சுற்றுலா தலங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நல்லவாடு, மூர்த்திக்குப்பம் கடற்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும், தரைக்காற்று 60 கிலோமீட்டர் முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது. கடல் அலை 5 முதல் 6 அடி வரை அதிகரித்துள்ளதால் மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து வருகிறது. புயல் நெருங்கி வருவதால் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் அதிகரிக்கும் என்பதால் கடலோர சாலை மற்றும் சுற்றுலா தலங்கள் முற்றிலும் மூடப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாரல் மலை உயர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.