மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த மாதம், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தது. இது மாநிலம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புக் குரல்களுக்கு வழிவகுத்தது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிராக கூட்டுப் போராட்டத்தை அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசு உத்தரவுகளை அரசாங்கம் ரத்து செய்தது. பின்னர், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த ஒரு பரிந்துரை குழுவையும் அமைத்தது. இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக்கிழமை, முதல்வர் ஃபட்னாவிஸ், மூன்றாம் மொழிப் பாடம் ஒரு விருப்பப் பாடமாக இருக்கும் என்றும், பரிந்துரைக் குழுவின் பரிந்துரையின்படி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மீரா பயந்தரில் நடந்த ஒரு கட்சிப் பேரணியில் ராஜ் தாக்கரே பேபேசியதாவது:- முதல்வர் ஃபட்னாவிஸ் ஏற்கனவே ஒரு முறை இந்தியைத் திணிக்க முயன்றார், நாங்கள் எல்லா கடைகளையும் மூடிவிட்டோம். இப்போது அவர் மீண்டும் இந்தியைத் திணிக்க முயன்றால், பள்ளிகளை இழுத்து மூடவும் நாங்கள் தயங்க மாட்டோம். இந்தியைத் திணிப்பதன் மூலம் மும்பையை குஜராத்தோடு இணைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்தி 200 ஆண்டுகள் பழமையானது, ஆனால் மராத்திக்கு 3,000 ஆண்டு வரலாறு உண்டு. பீகாரில் இருந்து குடியேறியவர்கள் குஜராத்தில் தாக்கப்பட்டபோது, அது ஒரு பிரச்சினையாக மாறவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் நடக்கும் ஒரு சிறிய சம்பவம் தேசிய பிரச்சினையாக மாறி வருகிறது. இந்துத்துவா என்ற போர்வையில் மகாராஷ்டிராவில் இந்தி திணிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மக்கள் எல்லா இடங்களிலும் மராத்தி பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.