ஜெய்ப்பூரை சேர்ந்த பிஜாராணி சகோதரர்கள் சுபாஷ் மற்றும் ரன்வீர் ஆகியோர், நிலம் வாங்கித் தருவதாக கூறி 70,000 மக்களிடம் ரூ.2,700 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர். முதல் முதலாக 2014ஆம் ஆண்டு தோலேராவில் நிலம் வாங்கிய சுபாஷ், பின்னர் தம்பியுடன் இணைந்து ‘நெக்ஸா எவர்கிரீன்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 2021ல் அந்த நிறுவனம் ஆமதாபாத்தில் பதிவு செய்யப்பட்டது.
அந்த நிறுவனம், ‘தோலேரா ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறி, 1,300 பிகாக்கள் நிலம் தங்களிடம் இருப்பதாக மக்களிடம் விளம்பரம் செய்தது. உலக தரத்திற்கு ஏற்ப நகரம் உருவாகும் என்றும், லாபம் அதிகம் கிடைக்கும் என்றும் கூறி, பிளாட்கள், மனைகள் முதலீடுகள் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய மக்களை நம்பவைத்தனர். இதன் மூலம் அவர்கள் நாடு முழுவதும் இருந்து ரூ.2,676 கோடியை திரட்டினர். இதில் கமிஷனாக ரூ.1,500 கோடி விநியோகிக்கப்பட்டது.
பணத்தை திரட்டிய பின் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ துவங்கினர். ராஜஸ்தானில் சுரங்கங்கள், ஹோட்டல்கள் வாங்கினர். ஆமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், கோவாவில் 25 ரிசார்ட்டுகள் வாங்கினர். பின்னர் ரூ.250 கோடியை எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை 27 போலி நிறுவனங்களுக்கு மாற்றினர். அதன்பின் தங்களின் அனைத்து அலுவலகங்களையும் மூடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
மோசடியில் சிக்கிய பலர் ஜோத்பூரில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்க இயக்குநரகம் தற்போது ஜெய்ப்பூர், சிகார், ஜுன்ஜுனு, ஆமதாபாத் ஆகிய 25 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது. அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளனர்.