புது டெல்லி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். மாநிலங்களவை செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆவார். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை மாநிலங்களவையின் அறை எண் 28-ல் உள்ள தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.
பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம். இதற்கான வைப்புத்தொகை ரூ. 15,000. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறும்.

போட்டி இருந்தால், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்காளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் F-101-ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜக்தீப் தன்கர் ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அந்தப் பதவி காலியாக உள்ளதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த சூழலில், குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.