புதுச்சேரி: புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் யூடிசியாகப் பணியாற்றியவர் மக்களிடம் ரூ.65 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரியவந்துள்ளது. வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை, அதாவது, பயனாளிகளிடம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.20,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 30,000 செலுத்தாமல் பல ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.
அவர் ஏமாற்றியதற்கு முக்கியக் காரணம், அந்தத் துறையில் ஒவ்வொரு மாதமும் அனைத்துத் திட்டங்களுக்கும் வழங்கப்படும் நிதியுதவியை தணிக்கை செய்யாமல் இருப்பதுதான். இந்தக் குற்றத்தை ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. LTC, UTC, Assistant, Superintendent, AT, TD, Director மற்றும் Cashier உட்பட யாராவது இந்தக் குற்றத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், இதைத் தடுத்திருக்கலாம். ஆனால், இந்த மோசடியைத் தடுக்கத் தவறிய இத்தனை பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்பதை உணராமல் அந்தத் தனி நபர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து மோசடியை மூடி மறைக்க அரசு முயல்கிறது.

புதுச்சேரி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான ரொக்கம் வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், மழைக்கால நிவாரண உதவிகள், புயல் நிவாரண உதவிகள் என பல்வேறு நிவாரண உதவிகள் அவ்வப்போது அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் 90 சதவீதத்திற்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் பொருட்களுக்கு பதிலாக வங்கிகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மக்களுக்கு வங்கிகள் மூலம் பணம் கொடுப்பதில் ஒரு சில அதிகாரிகளால் பல்வேறு முறைகேடுகள், ஊழல், மோசடிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அப்பாவி மக்கள் இதில் ஏமாந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களுக்காக பல்வேறு துறைகள் வங்கிகள் மூலம் செலுத்திய டெபாசிட் மற்றும் மானியங்களில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த விதிமீறலை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் விரிவான சிபிஐ விசாரணைக்கு ஆளுநரும், முதலமைச்சரும் உத்தரவிட வேண்டும் என்றார்.