சென்னை: சென்னை ஐஐடியில் இஸ்ரோ உதவியுடன் திரவங்கள் மற்றும் வெப்ப இயக்கவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து, சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) உதவியுடன், சென்னை ஐஐடியில் திரவங்கள் மற்றும் வெப்ப இயக்கவியல் சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஐஐடியில் கையெழுத்தானது. ஐஐடியின் டீன் (தொழில்துறை ஆலோசனை, நிறுவன ஆராய்ச்சி) மனு சந்தானம் மற்றும் இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகத்தின் இயக்குனர் விக்டர் ஜோசப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அவருடன் ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் பட்டமதாவும் உடன் இருந்தார். இந்த ஆராய்ச்சி மையத்தை அமைக்க இஸ்ரோ ரூ.1.84 கோடி வழங்குகிறது. ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பான வெப்பநிலை மேலாண்மை ஆராய்ச்சி இங்கு மேற்கொள்ளப்படும்.
ஐஐடி பேராசிரியர்கள் ராக்கெட், செயற்கைக்கோள் வடிவமைப்பு, பகுப்பாய்வு மற்றும் பல்வேறு கூறுகளின் சோதனையின் போது எழும் வெப்பநிலை தொடர்பான சிக்கல்களில் தொழில்நுட்ப உதவியை வழங்குவார்கள். இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளில் வெப்பநிலை மேலாண்மையால் எழும் சவால்களை எதிர்கொள்ளும் ஆராய்ச்சி தளமாக இந்த மையம் செயல்படும்.
செயற்கைக்கோள் வெப்பநிலை மேலாண்மை, திட மற்றும் திரவ எரிபொருள் ராக்கெட்டுகளில் எரிப்பு சிக்கல்கள், திரவ எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் உள்ள சவால்கள் பற்றிய மேம்பட்ட ஆராய்ச்சி பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் திரவவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறையில் புதுமைகளில் ஈடுபட்டுள்ள ஐஐடி பேராசிரியர்களின் கூட்டு முயற்சிகளை இந்த மையம் பெரிதும் ஊக்குவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.