புதுடெல்லி: மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஷ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதிடுகையில், “இந்தக் குழந்தைகளிடம் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் வழங்கிய அட்டைகள் உள்ளன.
அவர்களால் ஆதார் அட்டை பெற முடியாது. ஆதார் இல்லாததால் அவர்களுக்கு அரசு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுகிறது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்தக் குழந்தைகள் முதலில் அரசுப் பள்ளிகளில் சேர வேண்டும் என்று விரும்புகிறோம். சேர்க்கை மறுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்றனர். ரோஹிங்கியா குழந்தைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கிலும் தாங்கள் முன்பு இதே உத்தரவை பிறப்பித்ததாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் ரோஹிங்கியா அகதிகளின் குழந்தைகளை அனுமதிக்க மறுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ‘கல்வி வழங்குவதில் எந்தக் குழந்தையும் பாரபட்சம் காட்டக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உத்தரவிட்டது.