கேரள முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) முறைப்படி இணைந்துள்ளார். இவர் 65 வயதுடையவர். ஆர்.எஸ்.எஸ் நிறுவனம் தனது நூற்றாண்டு விழாவையும் விஜயதசமி கொண்டாட்டத்தையும் நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

கொச்சியில் நடைபெற்ற விழாவில், ஜேக்கப் தாமஸ் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து கலந்து கொண்டு, விழாவுக்கு தலைமை தாங்கினார். அங்கு உரையாற்றிய அவர், “கேரள மக்கள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரானவர்கள் அல்ல. கலாசார வலிமை கொண்ட நபர்களை உருவாக்குவதே அதன் நோக்கம். இப்படிப்பட்ட நபர்கள் அதிகரித்தால் தேசம் வலுவடையும். மத, மொழி, ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது ஆர்.எஸ்.எஸ். நான் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றினாலும், இந்நிகழ்வில் தலைமை வகிப்பது பெருமையாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
ஜேக்கப் தாமஸ், கேரள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக பணியாற்றியவர். ஓய்வு பெற்ற பின், 2021ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் சேர்ந்திருந்தார். தற்போது ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்திருப்பது, கேரள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை பலரும் சமூக வலைதளங்களில் வரவேற்று, “கேரள கிறிஸ்தவர்கள் பா.ஜ.க-க்கு ஆதரவு தர ஆரம்பித்துவிட்டனர். மத பாகுபாடு இல்லாமல் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.