இந்தியன் ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆக இருக்கிறது. தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில்கள் முதல் அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்படுகின்றன. இதில், பல ரயில்களில் பேன்ட்ரி கார்கள் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

பேன்ட்ரி கார் இல்லாத ரயில்களில் பயணிகள் ரயில் நிலையங்களில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். இதோடு, ஐ.ஆர்.சி.டி.சி மூலம் நீங்கள் விரும்பும் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்தால், அது உங்கள் இருக்கைக்கே வந்து விடும். ஆனால், இந்தியாவில் ஒரு ரயிலில் பயணித்தால் உணவு இலவசமாக வழங்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அந்த ரயில் அமிர்தசரஸ்-நாந்தேட் இடையே இயக்கப்படும் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயில் 39 ரயில் நிலையங்களில் நிற்கும் நிலையில், 2081 கி.மீ தூரத்தை 33 மணி நேரத்தில் கடக்கிறது. கடந்த 29 ஆண்டுகளாக, இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு வழங்கப்படுகிறது.
சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் தங்கள் திபன் பாக்ஸ் அல்லது பிற பாத்திரங்களை கொண்டு இலவச உணவு வாங்கிக் கொள்ளலாம். இந்த ரயிலில் பொதுப் பெட்டிகள் முதல் ஏசி பெட்டிகள் வரை உள்ள அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. புது தில்லி மற்றும் டாப்ரா ரயில் நிலையங்களில் இருபுறமும் உணவு வழங்கப்படுகிறது.
கதி-சாதம், கொண்டைக்கடலை, பருப்பு, கிச்சடி மற்றும் உருளைக்கிழங்கு-காலிஃபிளவர் போன்ற சத்தான உணவுகள் சுடச்சுட வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த இலவச உணவுகள் குருத்வாராக்களால் வழங்கப்படுகின்றன, மேலும் இந்த உணவுக்கான செலவுகள் குருத்வாராக்களால் பெறப்படும் நன்கொடைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.