புதுச்சேரி: கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல்… வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல இடங்களில் போலி கால் சென்டர்கள் நடத்தி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் செய்து லாபம் ஈட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் 7 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் நாகம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கோகிலா, 38; செவிலியர். ஆன்லைனில் டிரேடிங் செய்து லாபம் பார்க்கலாம் என பேஸ்புக்கில் தேடினார். அதில் வந்த விளம்பரத்தை பார்த்து, தனது முகவரி, தொலைபேசி எண்ணை பதிவிட்டார்.
அதையடுத்து, கோகிலாவை கடந்தாண்டு செப்., மாதம் பெங்களூருவில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், ‘குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன், அல்கோ மாஸ்டர் டிரேடிங் கம்பெனியில் வேலை செய்வதாகவும், தங்களின் ஏ.ஐ., தொழில்நுட்ப சாப்ட்வேர் மூலம் முதலீடு செய்தால், அதுவே டிரேடிங் செய்து தினசரி ரூ. 8000 வரை லாபம் அளிக்கும்’ என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய கோகிலா, மர்ம நபர்கள் அனுப்பிய 67 லிங்க்குகள் மூலம் பல தவணைகளில் ரூ.18 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். லாப பணம் ஏதும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார், மோசடி கும்பலின் வங்கி பரிவர்த்தனை, வாட்ஸ்ஆப், இணையதள முகவரிகளை ஆராய்ந்தனர். மோசடி கும்பல் நெய்வேலி மற்றும் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று, அங்கு பதுங்கியிருந்த மோசடி கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்கள், கேரளாவை சேர்ந்த பிரவீன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெகதீஷ், பெங்களூரு தேவனாஹல்லியை சேர்ந்த முகமது அன்சர், நெய்வேலி பகுதியை சேர்ந்த தவுபில் அகமது, ராமச்சந்திரன், ஆனந்த், விமல்ராஜ் என தெரிய வந்தது. அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக் தகவல்கள் வெளியானது.
இந்த கும்பல் நெய்வேலி, நாமக்கல், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் என்.டி.எஸ்., குரூப் ஆப் கம்பெனி பெயரில் கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர். அதில் 200க்கும் மேற்பட்டோரை பணிக்கு அமர்த்தினர்.
இந்த ஊழியர்கள் மூலம் தினசரி பலருக்கு போன் செய்து, தங்களின் ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் இணையதளத்தில் முதலீடு செய்யுமாறு ஆசை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. என்.டி.எஸ்., குரூப் ஆப் கம்பெனியில் ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார், அங்கிருந்த 4 சொகுசு கார்கள், ஒரு வேன், விலை உயர்ந்த பைக், நுாற்றுக்கும் மேற்பட்ட கம்யூட்டர்கள், கிரடிட் கார்டு, டெபிட் கார்டுகள், பாங்க் பாஸ் புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 3 கோடி.